×

“குறைந்த தொகுதிகள் கொடுத்ததை திருமா எப்படி ஏற்றார் என தெரியவில்லை”- செல்லூர் ராஜூ

 

அதிமுக தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் எடப்பாடி  தான் டாப்பு, மற்ற அறிக்கை எல்லாம் டூப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், மேற்கு தொகுதி வேட்பாளருமான செல்லூர்ராஜூவை அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ பேசுகையில், “மதுரை மேற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தந்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. என்னால் கழகத்திற்கு எந்த அவப்பெயரும் ஏற்படாது. 2 முறை அமைச்சாராகவும், ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் என்னால் முடிந்த நல்ல காரியங்களை செய்துள்ளேன். நான் எம்எல்ஏவாக ஆற்றிய சேவைகள் மக்களுக்கு நன்றாக தெரியும். மக்கள் தான் எசமானர்கள். அவர்கள் தான் இறுதி முடிவு எடுப்பார்கள். சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் என்பதை போலத்தான் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இருக்கின்றன. மாபெரும் மக்கள் இயக்கத்தை கொண்ட திருமாவளவனுக்கு குறைந்த தொகுதிகளை கொடுத்ததை எப்படி ஏற்றார் என தெரியவில்லை?. மதிமுகவில் உள்ள தொண்டர்களும் தலைவர்களும் தொகுதி பங்கீட்டால் ஏமாந்து போய் உள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் உரிய முக்கியத்துவமில்லை. அதிமுக கூட்டணியில் அனைவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டுள்ளனர்.


எத்தனை தொகுதிகளில் வெல்கிறோம் என்பது தான் முக்கியம். அமைச்சர்களின் தொகுதிகளில் போட்டியிடுகிறோமா என்பது முக்கியமில்லை. அமைச்சர் என்பதெல்லாம் கிடையாது, தேர்தல் வந்தால் மக்கள் தான் முடிவு செய்வார்கள். கூட்டணி கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களையே கொடுத்துள்ளோம். எங்கள் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் எடப்பாடி  தான் டாப்பு மற்ற அறிக்கை டூப்பு. தேர்தல் கதாநாயகனாக அதிமுக தேர்தல் அறிக்கை உள்ளது” என்றார்.