"விஜயை வற்புறுத்தி கூட்டணி அமைக்க முடியாது”- செல்லூர் ராஜூ
விஜயை வற்புறுத்தி கூட்டணி அமைக்க முடியாது, அதிமுக யாருக்கும் அடிபணிந்து போகாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். திமுக வலுவிழந்து இருப்பதால் தான் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்கிறது. மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காகவே அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. விஜய் ஒரு அரசியல் கட்சி நடத்துவதால் அவருக்கு எவ்வளவோ விதங்களில் நெருக்கடி கொடுக்கலாம். ஜனநாயகன் படத்திற்கு நெருக்கடி கொடுப்பது அரசியல் ரீதியானது அல்ல. இதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. அதிமுக பலமிழக்கவில்லை, தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்" என்றார்
விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறதா என்ற கேள்விக்கு, "யாரையும் வற்புறுத்தி கூட்டணிக்குள் சேர்க்க முடியாது. தொண்டர்களும், தலைவர்களும் விரும்பி அமைக்கும் கூட்டணி தான் சரியாக வரும். பாஜக மாபெரும் இயக்கம், மோடி அப்படியெல்லாம் செய்ய மாட்டார்" என்றார். விஜயை பார்த்து பயமிருக்கிறதா? என்ற கேள்விக்கு, "அதிமுக எப்போதும் யாருக்கும் அடிபணிந்து போனது கிடையாது. இனியும் போகாது. நாங்கள் எமனையே பார்த்தவர்கள். குண்டையே தொண்டையில் வைத்துக்கொண்டு எமனுக்கு டாடா காட்டிய இயக்கம் இது" என்றார்.