“விஜய் அதிமுக கொள்கையை தான் கடைபிடிக்கிறார்”- செல்லூர் ராஜூ
ஆளுங்கட்சியான திமுகவை எதிர்த்தால் தான் தன் கட்சியை மக்களிடம் கொண்டு சென்று முன்னேற்ற முடியும் என்று விஜய் பேசுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக சார்பில் விருப்பம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி கேரளா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், கட்சியினர் விருப்ப மனுகளை பெற்று ஒப்படைத்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அம்மாவாசை தினம் என்பதால் அதிக அளவில் கட்சி அலுவலகத்திற்கு, அதிமுகவினர் வந்தனர். சில தினங்கள் விருப்ப மனுக்களை பெறுவதற்கு அதிகளவில் அதிமுகவினர் வரமால் கட்சி அலுவலகம் வெறிச்சோடிய நிலையில் இன்று நல்ல நேரத்தில் விருப்ப மனுக்களை பெற்று தாக்கல் செய்தனர். அதிலும் வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை என்பதால், உடுமலை ராதாகிருஷ்ணன், செல்லூர் ராஜூ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு அதிமுக நிர்வாகிகள் திரளாக வந்து விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர். 15 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை 3 ஆயிரத்து 200 விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 1500 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “ஆளுங்கட்சியான திமுகவை எதிர்த்தால் தான் தன் கட்சியை மக்களிடம் முன்னேற்ற முடியும். அதற்காகத்தான் விஜய் அப்படி சொல்கிறார். அவர் அதிமுக கொள்கையை தான் கடைபிடிக்கிறார். செங்கோட்டையன் என யாராக இருந்தாலும் தனி மனிதர்கள் போவதால் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை. உண்மையான விசுவாசி என்றால் இனிமேல் இந்த வயதுக்கு மேல ஒரு கட்சியில சட்டமன்ற உறுப்பினராக சேர்ந்து புதிய கட்சி தலைவரை வாழ்த்தனுமா? அதிமுகவில் இருந்து தன்னை நிலைநாட்டி இருக்கவேண்டும். அப்படி இருந்திருந்தால் ஒவ்வொரு அண்ணா திமுகவினர் மனதிலும் இருந்திருப்பார். இப்போது அவரை ஒட்டுமொத்தமாக தூக்கி எரிந்து விட்டார்கள்” என்றார்.