“அரசை மட்டும் குறை சொல்லக்கூடாது, நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கும் பொறுப்பு உள்ளது”- செல்லூர் ராஜூ
தமிழ்மணி சாரிட்டபிள் & எஜூகேஷனல் டிரஸ்ட் , அரவிந்த் கண் மருத்துவமனை & ஈஸ்வரா மருத்துவமனை ராதா பல் மருத்துவமனை இணைத்து கடத்தும்
இலவச கண் சிகிச்சை, பல் மருத்துவம் பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் செல்லூர் ராஜு குடும்பத்தினரும், அதிமுக கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர். காவல்துறை தடுப்பு அமைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.. தமிழகத்தில் இது போன்ற சம்பவம் நடந்ததில்லை. வடநாட்டில் தான் இது போன்ற சம்பவம் நடைபெறும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சம்பவங்கள் இதுபோன்று நடக்கிறது. விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெறுகிறது. அரசாங்கம் விழித்துக் கொள்ள வேண்டும். கட்டுப்பாடு விதிக்கிறார்கள். அவை எழுத்தளவில் தான் உள்ளது. தவெக ஏற்கனவே 2 கூட்டங்களுக்கு மேல் நடத்தி உள்ளது. எனவே அவர்களுக்கு தெரியும். கரூர் கூட்ட நெரிசலில் பலியானதற்கு, அரசாங்கத்தை மட்டும் இந்த விஷயத்தில் குறை சொல்லக்கூடாது. நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கும் பொறுப்பு உள்ளது. கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்
விஜய் இதுபோன்று பேருந்தில் பயணம் செய்து தொண்டர்களை பார்ப்பதை மிகவும் விசாலமான இடத்தில் நிகழ்ச்சியை நடத்தலாம். அல்லது தொகுதி வாரியாக சென்று தொண்டர்களை சந்திக்கலாம். இளங்கன்று பயம் அறியாது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். மன வருத்தமாக உள்ளது. இறந்தவர்களுக்கு அதிமுக சார்பிலும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பலியானவர்கள் நிறைய பேர் இளைஞர்கள். ஆகவே மனது வலிக்கிறது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அதிமுக சார்பில் மதுரை விமான நிலையம் அருகே பொன்விழா மாநாடு நடந்தது. அப்போது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர். தொண்டர்கள் கூட்டம் அதிகமானதால் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர். எனவே கரூரில், தவெக தொண்டர்களை முன்னதாகவே போலீசார் கட்டுப்படுத்தி இருக்கலாம். எந்த கூட்டமாக இருந்தாலும், அவங்க பேருந்தில் சென்று பேசக்கூடிய பகுதியில் எவ்வளவு பேர் இருக்க முடியுமோ? அவ்வளவு பேர் தான் அனுமதிக்க வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் காலதாமதமாக சிகிச்சைக்கு சென்றதால் பலர் உயிரிழந்துள்ளனர். தவெக தொண்டர்களிடையே கட்டுக்கோப்பு இல்லை. இனிமேலாவது, முன்னதாக திட்டமிட்டு கூட்டத்தை நடத்த வேண்டும், கரூர் விபத்து சம்பவம் தமிழக மக்களிடையே மிகவும் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இருதரப்பிலும் தவறு உள்ளது” என்றார்.