×

அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம்- செல்லூர் ராஜூ

 

அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம், திருமாவளவன் எங்கள் சகோதரர் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம், திருமாவளவன் எங்கள் சகோதரர். திருமாவளவன் மீது ஜெயலலிதா அன்பும், பாசமும் கொண்டவர். எடப்பாடி பழனிசாமி மீதும் பாசம் கொண்டவர். எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை ராசியான இடம்.  மதுரை வரும்போதுதான் அவருக்கு வெற்றிமேல் வெற்றி வருகிறது. 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வருகிறார்.

ஆன்லைன் ரம்மி மசோதா விவகாரத்தில், ஆளுநருக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மாநில அரசுக்கு அனுமதி இல்லை, மத்திய அரசுக்கே அனுமதி உள்ளது என ஆளுநர் கூறுகிறார். பாஜகவின் நடவடிக்கை கண்டிக்கதக்கது. பாஜக தலைமை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என உறுதி அளித்துள்ளது. மோடி ஜி சிறப்பாக ஆட்சி செய்கிறார். தமிழ் மொழி, கலாச்சாரத்தை உலகம் அறிய செய்கிறார். அவரை போன்று ஒரு பிரதமரை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. கூட்டணி என்பது கட்சியின் கொள்கையல்ல. கூட்டணியை எப்போதுவேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

இன்றைய மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு எது ஆரோக்கியமானதோ, அதனை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்தாலோசிக்குமாறு பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள், அவர்களது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டுவருவதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தினார்” என்றார்.