×

பளுதூக்குதல், நீச்சல் போட்டியில் சென்னை மாணவர்கள் சாதனை - சசிகலா வாழ்த்து!!

 

பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி பிளெஸ்ஸிக்கும்,  நீச்சல் போட்டிகளில் 300 பதக்கங்களை வென்றுள்ள மாணவன் கவின்ராஜுக்கும் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விவேக் என்பவரின் மகளான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பிளெஸ்ஸி, ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான மகளிர் ஜூனியர் பளு தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கமும், மகளிர் சீனியர் பிரிவுக்கான பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார் என்ற செய்தி கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மேலும், மாநில அளவிலும் இதுவரை 17 தங்கப் பதக்கங்களை வென்று இருக்கிறார். மாணவி பிளெஸ்ஸிக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

அதே போன்று, சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் கவின்ராஜ், மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் உள்ளிட்ட 300 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். மாணவன் கவின்ராஜுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும், மாணவி பிளெஸ்ஸி மற்றும் மாணவன் கவின்ராஜ் ஆகியோர் தங்களது பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற ஒலிம்பிக்கில்  இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.