“விஜய் வாங்கிய வாக்குகள் அனைத்தும் அதிமுக வாக்குகள்”- ராஜேந்திர பாலாஜி
விருதுநகரில் அதிமுக மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் அவைத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் ஏற்றப்பட்டது.
பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, 2026 தேர்தல் முடிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், இந்த வெற்றி சுனாமி போன்றது என்றும், எனவே இது நிலையானதல்ல என்றும் தெரிவித்தார். அதிகாரத்தில் இருந்தால்தான் கட்சியை நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்படும், அந்த நிலை அதிமுகவிற்கு இல்லை என்றும் கூறினார். தவெக தலைவர் விஜய் ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக இல்லாமல் வந்திருக்கிறார் என்றும், ஒரு நட்சத்திர நடிகரின் மாயையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். வேட்பாளர் யார் என்று தெரியாமலேயே வாக்குகள் அவர்களுக்கு விழுந்திருக்கின்றன என்றும், தவெக கட்சியில் வெற்றிபெற்றவர்கள் என்ன சாதிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். தேர்தலில் அதிமுக வெற்றிபெறும், திமுக இரண்டாவது இடம் வரும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்த போதிலும், கடைசி நான்கு நாட்களில் ஒரு மாய உலகில் செல்பேசி மூலம் மக்கள் மயங்கிவிட்டார்கள் என்று கூறினார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி வாக்குகளை பெறுவது வெளிநாடுகளில் கேள்விப்பட்டிருக்கிறோம், தற்போது அது தமிழகத்திலும் நடைபெற்றுள்ளது என்றார்.
விஜய் கட்சிக்கு வாக்களித்தவர்கள் தற்போது மனம் வருந்தும் செயல்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்த அவர், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வந்திருப்பது காலம் தந்த கொடை என்றும், கட்சியில் ஏற்பட்டிருக்கும் விரிசல்களை கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும் என்றும் கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என ஒரு கோடியே 30 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள் என்றும், வாக்காளர்கள் நம் பக்கமே இருக்கிறார்கள் என்றும், மக்கள் அதிமுகவை எளிதில் கைவிட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏற்பட்ட தேர்தல் சுனாமியில் சிக்கி வெற்றி வாய்ப்பை இழந்தவர்களில் தானும் ஒருவன் என்று ஒப்புக்கொண்ட அவர், விஜய் வாங்கிய வாக்குகள் அனைத்தும் அதிமுக வாக்குகளே என்றும், திமுகவின் வாக்குகள் அப்படியே அவர்களுக்கே சென்றது என்றும் தெரிவித்தார். அதிமுக மற்றும் பாஜகவின் வாக்குகள் விஜய் அணிக்கு சென்றது கால சூழ்நிலை என்று கூறினார்.