“கூட்டணிக்காக அதிமுக யாரிடமும் தவம் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை”- ராஜேந்திர பாலாஜி
கூட்டணி வைப்பதற்காக அதிமுக யாரிடமும் தவம் கிடக்க வேண்டிய அவசியம் கிடையாது, அதிமுகவை நாடிதான் கூட்டணி கட்சிகள் வந்து கொண்டிருக்கின்றது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 226வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரில் அமைந்திருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, சண்முகநாதன், செல்ல பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கரூர் விவகாரத்தில் உண்மை நிலவரம் வெளிவர வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குரல் கொடுக்கிறார். கூட்டணி வைப்பதற்காக அதிமுக யாரிடமும் தவம் கிடக்க வேண்டிய அவசியம் கிடையாது அதிமுகவை நாடி கூட்டணி கட்சிகள் வந்து கொண்டிருக்கிறது. பக்குவப்பட்ட தலைவராக எல்லோரையும் ஒருங்கிணைக்க கூடிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உயர்ந்துள்ளார்.
சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வைக்கும் கருத்துக்கள் எல்லாம் கரூர் சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 41 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் . அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களுடைய பொதுச்செயலாளர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கரூர் சம்பவம் நடைபெற்ற போது அங்குள்ள காவல்துறை கொடுத்த செய்திக்கும் தற்போது தமிழக முதல்வர் கொடுக்கும் செய்திக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிய கருத்துக்களும் வெளியே சொன்ன கருத்துக்களிலும் உண்மை இருக்கிறது. அதைத்தான் மக்களும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். கரூர் சம்பவம் பற்றி அரசிடமிருந்து தெளிவான விளக்க வேண்டும் என்பதைத்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து எடுத்து கூறி வருகிறார்” என்றார்.