“என்னை திமுகவினர் குறி வைக்கின்றனர்”- கண்ணீர்விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி
எடப்பாடி பழனிசாமியின் பிரசார முகமாக உள்ளதால் தன்னை சிலர் குறிவைப்பதாக கூறி, சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கண்கலங்கியபடி பேசினார்.
சிவகாசியில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ எடப்பாடியாரின் பிரச்சார முகமாக உள்ளதால் என்னை குறிவைத்து பொய் வழக்கு போடுகின்றனர். திமுக அரசு என் மீது பொய்யாக வழக்கு பதிந்து கைது செய்தது. மோசடி வழக்கில் என்னை கைது செய்தபோது அதிமுகவிற்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் கையெழுத்து கேட்டனர். செத்தாலும் சாவேன் அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன் என உயர் அதிகாரிகளிடம் கூறிவிட்டேன்.
என்னை மிரட்டி பணியவைக்க நினைத்தது. என்னை எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் ஆக்கிய சிவகாசி தொகுதியில்தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெல்வேன். பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை. பிரதமர் மோடி தமிழகத்தின் மீது வைத்திருக்கின்றன பெருமையை தெரிந்து கொண்டு திருமாவளவன் கொண்டது, பிரதமரை வரவேற்றது சிறப்புக்குறியது. அதிமுக- பாஜகவும் பலமாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாக எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி சந்திப்பு இருந்திருக்கிறது” என்றார்.