×

மதுரையில் வரும் 12-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

 

மதுரை மாநகராட்சி ஊழல் முறைகேட்டில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வரும் 12-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 58 மாத காலமாக நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்யாமலும் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமலும் மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தராமலும் வெற்று விளம்பரங்களையும், பொய்யான வாக்குறுதிகளையும் அளித்து, தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
    
அந்த வகையில், மதுரை மாநகராட்சி நிர்வாகப் பதவிகளில் இருந்த ஆளும் திமுக-வினரால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஊழல் முறைகேடுகளைத் தொடர்ந்து, திமுக-வைச் சேர்ந்த மாநகராட்சி மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், விடியா திமுக அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றம் புரிந்தவர்களுக்கு ஆதரவாக இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். மாநகராட்சி மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்து 5 மாதங்கள் ஆகியும், அப்பதவிகளுக்கு இதுவரை யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.  இதன் காரணமாக, மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு, அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல், குற்றம் இழைத்துள்ளவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு, 
எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    
இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் 12.3.2026 – வியாழக் கிழமை காலை 10 மணியளவில் `முனிச் சாலை, தினமணி தியேட்டர் அருகில்’, கழக அமைப்புச் செயலாளரும், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. செல்லூர் மு. ராஜூ, அவர்கள் தலைமையிலும், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. ஏ.ஏ. ராஜன் செல்லப்பாஅவர்கள் முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.