×

தர்மயுத்தம் நடத்தியது தவறு என ஓபிஎஸ் உணர்ந்துள்ளார்- டிடிவி தினகரன்

 

ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய  வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார், அதுதான் கருத்து என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், வாய்ப்பு இருந்தால், காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்றார்.

இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “இரட்டை இலை  எடப்பாடி பழனிசாமி கையில் இருக்கும் வரை  கட்சி செல்வாக்கை இழந்து கொண்டே வரும். கடந்த 2017-ம் ஆண்டு ஓ .பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தியது தவறு என அவர் உணர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய  வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார், அதுதான் கருத்து. மேற்கு மண்டலம் எங்களது கோட்டை என எடப்பாடி பழனிச்சாமி கூறிவந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.விடம் படுதோல்வி அடைந்துள்ளார். 

இரட்டை இலை சின்னம் இருந்தும், ஏற்பட்ட படு தோல்வி அ.தி.மு.க பலவீனம் அடைந்துள்ளது என நினைக்கத் தோன்றுகிறது. அ.தி.மு.க பொதுச் செயலாளர், தேர்தல் தொடர்பாக வருகின்ற 24-ஆம் தேதி வரக்கூடிய நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை என்னால் கூற முடியாது. மக்களை சமாளிக்கவே போடப்பட்ட பட்ஜெட்டாக தெரிகிறது. ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதியத்திட்டம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை” எனக் கூறினார்.