×

"விஜய்க்கு தன்னம்பிக்கை இல்லை... அதனால் எம்ஜிஆரை பயன்படுத்துகிறார்”- நத்தம் விஸ்வநாதன்

 

விஜய் மக்கள் மத்தியில் சினிமா கதாநாயகனாகத்தான் தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறார். விஜயை அரசியல்வாதியாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “மதுரையில் நடைபெற்ற விஜய் மாநாடானது சினிமா துறையின் மாநாடாகும். விஜய்க்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. மக்களுக்காக என்ன பணி செய்து இருக்கிறார். மக்களோட பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு கண்டு இருக்கிறார். தன்னை அரசியல்வாதி என்று அவர் அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை. மக்கள் மத்தியில் சினிமா கதாநாயகனாகத்தான் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறார். விஜயை அரசியல்வாதியாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை. விஜய்க்கு தன்னைப் பற்றி தன் நம்பிக்கை இல்லை. அதனால், எம்.ஜி.ஆர்., படத்தை பயன்படுத்துகிறார். எதுக்கு அவர் தலைவர் (எம்.ஜி.ஆர்) படத்தை போட்டு பயன்படுத்துகிறார்? அவருக்கு தைரியம் இருந்தால், திறமை இருந்தால், அவரது செல்வாக்கை வைத்து அரசியலுக்கு வர வேண்டியது தானே?

நேற்று மழையில் இன்று முளைத்த காளான் அவர். விரைவில், இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார். திண்டுக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும். விரைவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி தலைமையில் உருவாக்கப்படும். அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக வருவது குறித்த தலைமை தான் முடிவு செய்யும். எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் வரலாம்?. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதியிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது” என்றார்.