“விஜய் கட்சி வெறும் சினிமா மோகம் மட்டுமே... அதிமுக - திமுக இடையே தான் போட்டி”- எம்.ஆர்.விஜயபாஸ்கர்
விஜய் கட்சி வெறும் சினிமா மோகம் மட்டுமே,போட்டி என்னவோ அதிமுக - திமுக இடையே தான் என தவெக குறித்து எம்.ஆர். விஜயபாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
இன்று காலை 7 மணி முதல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் ஆங்காங்கே தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கரூர் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் தனது குடும்பத்துடன் வருகை தந்து வாக்கினை ஆண்டாங் கோயில் கிழக்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்கினை செலுத்தினார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சரான எம்ஆர் விஜயபாஸ்கர், “கடந்த இரண்டு மாதங்களாகத் தேர்தல் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வந்தது. இன்று காலையிலேயே மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மக்களின் எழுச்சியைப் பார்க்கும் பொழுது, தமிழகத்தில் மீண்டும் புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சி மலரும் , எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்பதும் உறுதியாகத் தெரிகிறது. ஆனால் கரூர் தொகுதியில் மட்டும் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் இடையிலான ஒரு தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையினர் ஆளுங்கட்சியினருக்குச் சாதகமாக செயல்படுகின்றனர். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் பூத் ஸ்லிப் மட்டுமின்றி, தேர்தல் ஆணையம் அங்கீகரித்த ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். தவெக ஒரு சினிமா மோகம் மட்டுமே அது தேர்தலை பாதிக்காது, இறுதிப் போட்டி என்னவோ அதிமுக-விற்கும் திமுக-விற்கும் தான்” எனக் கூறினார்.