அதிமுக தலைமைக்கு அண்ணாமலையா?- கே.பி.முனுசாமி விளக்கம்
அதிமுக தலைமைக்கு அண்ணாமலையை நியமிக்க வேண்டும் என பேசியதாக வெளியான செய்திக்கு கே.பி.முனுசாமி காட்டமாக பதில் கூறியுள்ளார்.
ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “அதிமுக தலைமைக்கு அண்ணாமலையை நியமிக்க வேண்டும் என பேசியதாக செய்திகள் வெளியானது. உண்மையான அதிமுக தொண்டனின் கண்கள் வேறு யாரையும் பார்க்காது. 60 வருட கட்சியை நேற்று வந்த நபருக்காக தீர்மானம் போடுகிறோம் என பேசுவதா? அண்ணாமலைக்கு விளம்பரம் தேடி கொடுக்க சிலர் முயல்கின்றனர். புஸ்ஸி ஆனந்தை பார்க்கத்தான் ஆட்டுக்கூட்டம் போல அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் ஓடுகிறார்கள். அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் பனையூர் கேட்டின் முன்பு நின்று கேட் எப்போது திறக்கும்? என்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு பட்டியில் இருந்து ஆட்டுக்கூட்டம் ஓடுவதுபோல், ஓடிச்சென்றுபார்க்கும் தலைவர் யார்? என்றால் அது புஸ்ஸி ஆனந்த் தான். ஏனென்றால், அக்கட்சியின் தலைவரை கூட அவர்களால் பார்க்க முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்திருந்தால் யாரும் அங்கு உள்ளே நுழைய முடியாது. இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. இப்போது வந்திருக்கும் கட்சி தொண்டர்கள் இல்லாத கட்சி. இவர்கள் சென்று அதை ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.
தவெகவுடன் அதிமுக இணையும் என இனியும் ஆதவ் அர்ஜூனா பேசினால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாய ரீதியில் விமர்சித்த திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை. தவெக எம்.எல்.ஏக்கள் தவறு செய்தது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் மிகப்பெரிய தவறுகளை முதல்வர் விஜய் செய்துவருகிறார். விஜயின் நடவடிக்கையால் தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கேள்விக்குறித்தான்.” என்றார்.