‘அஞ்சு கட்சி அமாவாசை... பத்து ரூபாய் தியாகி பாலாஜி’- செந்தில் பாலாஜியை விமர்சித்த ஜெயக்குமார்
இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, கடந்த 28.08.2024 அன்றே மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுவிட்டார்கள். அன்றைய தினம் புழல் சிறையில் இருந்ததால் "அஞ்சு கட்சி அமாவாசை" பத்து ரூபாய் தியாகி பாலாஜிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். (சிறையில் செய்தித்தாள்கள் படிக்கவில்லை போலும்!)
தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே, "அண்ணா- புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே தொடரும்" என ஆகஸ்ட் 2020ல் அறிவித்தவர் அன்றைய மாண்புமிகு முதல்வர் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்கள். இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும்; அதற்கான மிக வலுவான குரல் எங்கள் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் குரலாகத் தான் இருக்கும்!