டெல்லி-சென்னை இடையே விமான சேவை இல்லையா? கபடி வீராங்கனைகள் நாளை வரை காத்திருக்க வேண்டுமா?- ஜெயக்குமார்
உடலில் காயங்களுடன்-மனதில் வேதனைகளுடன் நாளை வரை இரயிலுக்கு காத்திருக்க வேண்டுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே நடைபெற்ற கபடிப் போட்டியின்போது முறைகேடு குறித்து புகார் அளித்த தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சியினர் அரசுக்கு வலியுறுத்தினர். இதனையடுத்து பஞ்சாப்பில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாடு கபடி வீராங்கனைகளை பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகள் டெல்லியில் தங்கவைக்கப்பட்டு நாளை ரயில் மூலம் தமிழ்நாடு திரும்புகின்றனர் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கூறினார்.