×

“எச்சில் கையால் கூட காக்கா ஓட்டாதவர் நடிகர் விஜய்”- ஜெயக்குமார்

 

சென்னை வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் அதிமுக சார்பில் டாக்டர் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக 48 ஆவது தெற்கு வட்ட செயலாளர் அன்பு கே.ஆறுமுகம் தலைமையிலும், இராயபுரம் பகுதி செயலாளர்கள் ஏ.டி.அரசு மற்றும் வி.எம்.மகேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்பு செயலாளரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயகுமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “தமிழகத்தில் விருப்பு வெறுப்பு இல்லாமல் பணியாற்ற வேண்டிய காவல் துறையினரும், அரசு துறையினரும் திமுக சாயம் பூசிய படியே பணியாற்றி வருகின்றனர். 2026 தேர்தலில் அதிமுக ஆட்சியமையும்போது அவர்களுக்கு தண்டனையுடன் கூடிய பாடம் புகட்டப்படும். ராயபுரம் தொகுதியில் 1996 ஆம் ஆண்டு தேர்தலை தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் நீங்கள் எனக்கு வாய்ப்பளித்தீர்கள். ஆனால் 2021 தேர்தலில் ஏன் எனக்கு நீங்கள் வாய்ப்பளிக்கவில்லை. தொடர்ந்து 5 முறை ராயபுரத்தில் நீங்கள் அளித்த ஆதரவுடன் பல்வேறு திட்டங்களை ராயபுரம் மக்களுக்காக செயல்படுத்தியுள்ளேன். ஜெயகுமார் ராயபுரத்திலிருந்து வேறு தொகுதிக்கு செல்கிறார்? மயிலாப்பூருக்கு செல்கிறார்? என பல வதந்திகள் பரப்பபட்டு வருகின்றன. நான் வேறு தொகுதியில் போட்டியிடுவேன் பொதுசெயலாளரிடம் கேட்டால் எனக்கு கொடுத்துவிடுவார். ஏனென்றால் அமைச்சராக இருந்தபோது அனைத்து தொகுதி மக்களாலும் அறியப்பட்டவன் நான். ஆனால் தற்போது இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் இதுவரை மக்கள் பணி எதுவும் செய்ததில்லை. தமிழகத்தில் எங்கு சென்றாலும் ராயபுரம் தொகுதி என்றால், ஜெயகுமார் தொகுதியா என எதிரில் இருப்பவர் கேட்கும் அளவிற்கு ராயபுரம் தொகுதி மக்கள் கொடுத்த ஆதரவால் ராயபுரத்தின் அடையாளமாக இருந்துள்ளேன். தமிழகத்தில் இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் நான் ராயபுரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன். 

தற்போது புதியதாக கட்சி ஆரம்பித்தவர்கள் அதிமுகவை ஊழல் கட்சி என்கின்றனர். ஆனால் அந்த கட்சி தலைவரிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி என்ன என்றால் நீங்கள் படத்திற்கு வாங்கும் சம்பளத்தில் எவ்வளவு பிளாக் மற்றும் எவ்வளவு ஒயிட் வாங்குகிறீர்கள் என கூற முடியுமா?. புரட்சி தலைவர் எம்ஜிஆர் சினிமா நடிக்க ஆரம்பத்தில் இருந்தே மக்களை மனதில் வைத்து அனைவருக்கும் தேவையான உதவிகளை செய்து மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் நடிகர் விஜயோ நடிகராக அறிமுகமானதில் இருந்து பல்வேறு சினிமாக்களில் நடித்து பல கோடி சம்பாதித்தபோதும் மக்களுக்கு ஏதேனும் நலத்திட்டங்களை செய்துள்ளாரா? தற்போது கட்சி ஆரம்பித்து தேர்தலுக்காக பல்வேறு கதைகளை கூறிவருகிறார். உண்மையில் சொல்லப்போனால் எச்சில் கையால் கூட காக்கா ஓட்டாதவர் தான் விஜய்” என தெரிவித்தார்.