“அதிமுக அமித்ஷா முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது”- திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள்!
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுப்புரத்தினம், பாலகங்காதரன் ஆகிய இருவர் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிமுக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் சுப்புரத்தினம், பாலகங்காதரன் ஆகியோர் தங்களை திமுகவில் இணைந்துகொண்டனர். திமுக பொருளாளர் டி ஆர் பாலு, அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, திமுக தலைமை செய்தி தொடர்பு குழு தலைவர் டி கே எஸ் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். இன்று திமுகவில் இணைந்த சுப்பரத்தினம் 1991 சட்டமன்ற தேர்தலில் பழனி சட்டப்பேரவை தொகுதியிலும், பாலகங்காதரன் அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிவகாசி சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், "திராவிட இயக்கங்களில் தாய்வீடான அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து தமிழ்நாட்டின் தலைமகனாக திராவிட மாடல் ஆட்சியின் நாயகனாக உள்ள, பொற்கால ஆட்சி நடத்தும் முதலமைச்சர் தலைமையில் திமுகவில் இணைத்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி. எங்களை தாயுள்ளத்தோடு திமுகவில் இணைத்துக் கொண்டது கழகத் தலைவருக்கும், துணை முதலமைச்சருக்கும் நன்றி. தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரக்கூடிய அரசியல் நிலையில், பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களையும், பெரியாரின் கோட்பாடுகளையும் நிலைநிறுத்தி, திராவிட இயக்கத்தை தமிழகத்திற்கு மட்டுமல்லது அகில இந்திய அளவிற்கு முன்னெடுத்துச் செல்ல ஆளுமையும் ஆற்றலும் மிக்க தலைவராக முதலமைச்சர் உள்ளார். இன்று அவருடைய கட்டளைகளை ஏற்று கழகத்திற்கு பணியாற்ற வந்திருக்கிறோம்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாலகங்காதரன், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரண்டு வாரங்களாக எனக்கு தூக்கமில்லை, கலவரம் ஏற்படாமல் அமைதியாக்கி, அமைதியை நிலை நாட்ட ஒருவர் தகுதியான தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான். இவர்தான் ஆண்மை மிக்க ஆளுமை மிக்க முதல்வர். தன்மானமிக்க முதல்வர். இன்றைய எடப்பாடி தலைமையிலான அதிமுக இருக்கட்டும், ஓ.பி.எஸ் ஆக இருக்கட்டும் இன்னும் இருக்கக்கூடிய அதிமுகவை பயன்படுத்தக்கூடிய அனைத்து தலைவர்களும், தமிழ்நாட்டின் உயிர்நாடியான இந்த பிரச்சனையை நியாயமான முறையில் அரசுக்கு ஆதரவளித்து அவர்கள் பக்க பலமாக இருப்பதைவிட, இன்று மதவாத சக்திகளுக்கு, பிரிவினைவாத சக்திகளுக்கு, மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கக்கூடிய பொது அமைதி கெடுக்கக்கூடிய ஒரு கும்பலுக்கு ஆதரவாக அறிக்கை விடுகின்றனர். இதில் எங்களுக்கு மட்டுமல்லாது, அதிமுகவில் உள்ள கடைக்கோடி தொண்டனுக்கும் வருத்தம் உள்ளது. அடுத்த ஆட்சி திமுக ஆட்சி தான் என்பதை இந்த விவகாரம் மூலமாக தமிழ்நாட்டு மக்கள் நன்கு அடையாளம் கண்டு விட்டனர்.
திருப்பரங்குன்றத்தில் முதலமைச்சரின் ஆளுமை காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பித்து, விதித்து ஒரு பொது அமைதி காத்தார். அதற்காகவே தமிழ்நாட்டு மக்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் தமிழ்நாட்டு மக்கள் அமைதியோடும் சகோதரத்துவ பாசத்தோடும் வாழ ஒரே தலைமை உண்டென்றால் அது தலைவர் தான். திமுக தலைமை தான் அதனை வழங்க முடியும் என நம்புகின்றனர். அடுத்த ஆட்சியும் திமுக தான் என்பதை மக்கள் இந்த விவகாரன் மூலமாக உறுதிப்படுத்தி விட்டனர். அதிமுக அமித்ஷா முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இலவச லேப்டாப், பொங்கல் பரிசு என அள்ளிக் கொடுத்திருக்கிறார். பெண்களுக்கான இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொடுத்துள்ளார்” எனக் கூறினார்.