×

பழனிசாமியை கண்டால் திமுகவுக்கு பயம்; அதற்காகவே வழக்குப்பதிவு- தங்கமணி

 

எடப்பாடி பழனிச்சாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நாமக்கல்லில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான  எடப்பாடி திரு பழனிசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி தலைமையில் நாமக்கல் பூங்கா சாலையில் இன்று (14-3-2023) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “முன்னாள் முதல்வர் மீதும், பாதுகாப்பு அதிகாரி மீதும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக இயக்கத்தை கண்டும், எடப்பாடி பழனிச்சாமி மீதும் திமுக அரசுக்கு பயம் என்பதை இந்த வழக்கு மூலம் தெரிந்து கொள்ளலாம். வஞ்சகத்தோடு திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளதை பொய் என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் மீது போடப்பட்ட பொய் வழக்கினை தமிழக முதல்வர் திரும்ப பெற வேண்டும்.  இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். திமுக அரசு விளம்பர அரசாக உள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்கும் போது தேர்தல் வாக்குறுதியான வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம். அதன்படி தமிழகத்தில் 2 கோடி குடும்பங்கள் 100 யூனிட் மின்சாரம் பெற்று பயனடைந்தனர். இதற்கு அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வீரப்பன்சத்திரம் பகுதியில் பிரச்சாரம் செய்த போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 750 யூனிட் மின்சாரம், 1000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை வெளியிட்ட  முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துகின்றனர்.

  
முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் மீது திருட்டு வழக்கு போட்டிருப்பதை முதலமைச்சர் யோசித்து சிந்தித்து இருக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் அதிமுகவினரை ஒழிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் மீது பொய் வழக்கு போடுவார்கள். அதிமுகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் இதற்கான தீர்வு வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால் திமுகவினர் மமதையில் உள்ளனர். 1.50 இலட்சம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கி உள்ளோம் என திமுகவினர் மார் தட்டுகின்றனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கினோம். தற்போது திமுக ஆட்சியில் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் 17,121 மெகாவாட் உச்சப்பட்சமாக இருந்தது. தற்போது திமுக ஆட்சியிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. மின்சாரம் உற்பத்தி அதிகரிக்க எந்த நடவடிக்கையும் வில்லை, இந்த அரசு மக்களை ஏமாற்றுகிறது” என்றார்.