×

ஈரோட்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் 42,000 வாக்குகளை இழந்தோம்- செங்கோட்டையன்

 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவினரோடு கூட்டணி வைத்ததால் 42 ஆயிரம் சிறுபான்மையின வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்காமல் மாற்றி வாக்களித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கேஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி என்பது அதிமுக வெற்றி வாகை சூடிய பகுதி. நீங்கள் கவலைப்பட தேவையில்லை, 44 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளோம். இதில் 42 ஆயிரம் பேர் சிறுபான்மையினர். அவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் நம்முடன் கூட்டணி இருப்பதன் காரணமாக  மாற்றி வாக்களித்தனர். திமுகவும்தான் பாஜகவோடு வாஜ்பாய் அரசில் 5 ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்தனர். எதற்காக சொல்கிறேன் என்றால் கொள்கை வேறு கூட்டணி வேறு என்பதை மறந்து விடக்கூடாது. 

உங்களை காக்கின்ற இயக்கமாக அதிமுக இருக்கும், தாழ்த்தப்பட்ட மக்கள் சிறுபான்மையினர் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே இயக்கமாக அதிமுக இருக்கும். ஏனென்றால் நாங்கள் புரட்சித் தலைவரின் வழியில் வந்தவர்கள், உங்களைப் பொறுத்தவரை ஜாதி இல்லை, மதம் இல்லை. ஆண், பெண் என்ற இரண்டு ஜாதிகள் மட்டுமே உள்ளது. உங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றைக்கும் இருக்கும்.

வருங்காலத்தில் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி அதிமுகவில் ஏற்றுக்கோட்டையாக இருக்கும் என்பதை நீங்கள் மாற்றிக் காட்ட வேண்டும், எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போம்” என பேசினார் ‌.