“எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் Parallel universe வைத்து ஏமாற்ற முடியாது”- விஜய்க்கு அதிமுக கண்டனம்
அம்மா உணவகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, இப்போதைய முதலமைச்சர் விஜய்யின் படத்தை வைத்திருப்பதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் எக்ஸ் தளத்தில், “அம்மா உணவகங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. “அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவம். அப்படி வரலாற்றில் நிற்கும் அம்மா உணவங்களில் உள்ள அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு உங்கள் புகைப்படத்தை வைத்துவிட்டால், அம்மா உணவகம் உங்கள் திட்டம் என்று மக்கள் நம்பி விடுவார்களா? எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் Parallel Universe வைத்துக்கொண்டு ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய முதல்வர் உணர வேண்டும்! உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்படத்தை நிறுவுவதுடன், அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுமாறு பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.