என்னை சங்கி என்று கூறுகிறீா்களே, அப்ப கருணாநிதி சங்கியா? - இபிஎஸ்
ஸ்டாலின் கை தான் ரத்தக் கறை படிந்த கை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சிவகங்கையில் பிரச்சாரம் மேற்கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “சிவகங்கை வீரம் செறிந்த மண். இதற்கு ஜல்லிக்கட்டு தான் சான்று. வீரம் செறிந்த மண்ணில் பேசுவதால் பெருமை. NDA கூட்டணி மகத்தான வெற்றிபெறும். என்னை சங்கி என்று கூறுகிறீா்களே, பாஜகவுடன் கூட்டணி வைத்த நீங்கள் யாா்? வாஜ்பாயுடன் கருணாநிதி இருக்கும் புகைப்படத்தை காண்பித்து யாா் சங்கி? பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சங்கி என கூறும் ஸ்டாலின் அவர்களே பாஜகவுடன் கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா? எனது கையில் ரத்தக் கறை படிந்திருப்பதாக ஸ்டாலின் பேசுகிறார். அஜித்குமார் மரணம், மானாமதுரையில் லாக் அப் மரணம் நடந்துள்ளது. அதுதான் ரத்தக்கறை படிந்த கை. திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 18,000 குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர். அப்பா என அழைப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லும் ஸ்டாலினுக்கு அவர்கள் கதறுவது எட்டவில்லையா? அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அப்பா.. அப்பா என்று அலறியது உங்களுக்கு கேட்கவில்லையா? திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்காத முதல்வரால் தான் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள் அதிகாித்துள்ளது. பலமுறை வலியுறுத்தியும் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை DGP நியமிக்கப்படாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.