“வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும்”- எடப்பாடி பழனிசாமி
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும். NDA கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டிலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் தனபால் மற்றும் இன்பதுரை ஆகியோரின் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டிலும் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எடப்பாடி நகராட்சியின் 30 வார்டுகளுக்கும் தடையில்லாமல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டுள்ளது எனவும் மேலும் சாலை வசதி, புதிய அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடைகள் உள்ளிட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதோடு, எடப்பாடி – சங்ககிரி சாலையில் அரசு அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் குறுகிய காலத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதாக கூறிய அவர், அந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் எடப்பாடி சட்டமன்ற தொகுதி மக்களின் மீதமுள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், வரண்ட நூறு ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தில் மீதமுள்ள ஏரிகளும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.