×

“எதிர்வரும் தேர்தலில் திமுகவுக்கு பூஜ்ஜியம்; அதிமுகவுக்கு ராஜ்ஜியம்”- எடப்பாடி பழனிசாமி

 

கூட்டணியை நம்பி தேர்தலை சந்திக்கிற கட்சி திமுக. ஆனால் அதிமுக கூட்டணியுடன் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிற கட்சி  என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சென்னை, வானகரத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணியை நம்பி தேர்தலை சந்திக்கிற கட்சி திமுக. ஆனால் அதிமுக கூட்டணியுடன் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிற கட்சி.  திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது.விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்யக்கூடிய ஒரே கட்சி திமுக. திமுகவின் கைப்பாவையாக தமிழக காவல்துறை மாறிவிட்டது. எதிர்வரும் தேர்தலில் திமுகவுக்கு பூஜ்ஜியம் கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு ராஜ்ஜியம் கிடைக்கும். அதிமுக நாட்டு மக்களுக்காக ஆட்சி செய்தது. திமுக வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்கிறது. ஸ்டாலின் அறிவித்த ரூ.5000 சூப்பர் ஹிட்டாகிவிட்டது என்று சொல்கிறார். மூன்று மாத உரிமைத் தொகை, கோடைக்கால உதவித் தொகை எனக் கூறி  5000 கொடுத்தார்கள். ஏனென்றால் தேர்தல் பயம் வந்துவிட்டது. உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டத்தில் மக்களிடம் உங்கள் கனவு என்னவென்று கேட்டால் திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே அவர்களின் கனவு என்கிறார்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி இருக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும், அதை ஸ்டாலின் பார்க்க போகிறார். ரூ.10,000 உதவித்தொகையாக அறிவித்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் வாயில் வடை சுடுகிறோம் என்கிறார் . ஸ்டாலின் தான் வாயில் வடை சுடுகிறார். 5 வருடமாக வடை சுட்டு மக்களுக்கு திமுக மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது. நீங்கள் ரூ.5000 கொடுத்தது சூப்பர் ஹிட்டல்ல. அதிமுக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 உதவித்தொகையாக கொடுப்போம் என அறிவித்தது தான் சூப்பர் ஹிட். சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கும் அளவுக்கு குற்றவாளிகள் துணிந்துவிட்டார்கள். மக்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்பதற்கு இதைவிட சாட்சி வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.