×

“தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி; எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது!”- ஈபிஎஸ்

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.5000 திமுக அரசு கொடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுகவின் அனைத்து திட்டங்களும் 2026ல் அதிமுக ஆட்சி அமைந்த பின் மீண்டும் தொடங்கப்படும். 2026ல் அதிமுக ஆட்சி அமைந்த பின் திருமணத் தம்பதிகளுக்கு விலையில்லாப் பட்டுப்புடவை, பட்டு வேட்டி வழங்கப்படும். திமுக அரசு நான்கு ஆண்டுக் காலம் மடிக்கணினி கொடுக்காமல், இறுதி ஆண்டில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பதன் நோக்கம் இளைஞர்களின் வாக்குகளைப் பெறவே. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் திமுகவிற்கு எதிராக பேச தொடங்கிவிட்டார்கள், 2026 வரை திமுக கூட்டணி எனும் லாரி முறையாக ஓடுமா என தெரியவில்லை. 

திமுக என்ற என்ஜின் இல்லாத காரை கூட்டணி என்கிற லாரி 10 ஆண்டுகளாக இழுத்து செல்கிறது. திமுக கூட்டணி என்ற லாரி மக்கர் செய்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டணி நிலைக்குமா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும், மத்திய அரசிடம் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தால்தான் ஊரக வேலை 100 நாட்களிலிருந்து 125 நாளாக மத்திய அரசு உயர்த்தியது. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. 1996 ஆம் ஆண்டு பாஜகவோடு திமுக கூட்டணி வைக்கும்போது பாஜக நல்ல கட்சி, அதுவே அதிமுக கட்சி கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா?” எனக் கேள்வி எழுப்பினார்.