"திமுக - அதிமுக கூட்டணி வைத்து ஆட்சி அமைப்பது என்பது கட்டுக்கதை" - இபிஎஸ்
அதிமுக சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்ற உறுப்பினர்களை இரவல் வாங்கிதான் விஜய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை முதல்வர் விஜய் களவாடி வருகிறார். அதிமுக சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி. நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் கட்சி பரிபாத நிலையில்தான் உள்ளது. காங்கிரஸில் என்ன இருக்கிறது? கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் காங்கிரஸின் நிலைமை. திமுக கூட்டணியில் வெற்றி பெற்று தவெகவுக்கு சென்று பதவி வாங்கியதுதான் காங்கிரஸின் கொள்கையா? முதலமைச்சராக இருப்பவர்வார்த்தைகளை யோசித்து பயன்படுத்த வேண்டும். விஜய் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. வெறும் பஞ்ச் டயலாக் பேசி வருகிறார்.
திமுக - அதிமுக கூட்டணி வைத்து ஆட்சி அமைப்பது என்பது கட்டுக்கதை. திமுக தீயசக்தி என்பதே எனது நிலைப்பாடு, திமுகவை தீயசக்தி என்று கூறி எதிர்த்தது அதிமுக. திமுக எதிர்ப்பில் அதிமுக உறுதியாக இருக்கிறது. திமுக எதிர்ப்பு என்ற நிலையில் அதிமுக உறுதியாக உள்ளது. விஜய் இன்னும் முதல்வர் அந்தஸ்துக்கே வரவில்லை. நாலாந்தர பேச்சாளர் போல விஜய்யின் கரூர் பேச்சு இருந்தது. வெறும் பஞ்ச் டயலாக் மட்டும்தான். 4 கால்கள் இருந்தால்தான் நாற்காலி நிற்கும். விஜய்யின் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால்” என்றார்.