டாஸ்மாக்கில் நாளொன்றுக்கு ரூ.15 கோடி கொள்ளை- இபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் ஏராளமான ஏழை எளிய மக்களை குறிவைத்து நாமக்கல்லில் கிட்னி திருட்டு நடைபெற்றது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் 75 நாட்களில் 346 கொலைகள் நடந்துள்ளது. தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை. தமிழகத்தில் ஒரு டிஜிபியை கூட நியமிக்க முடியாத நிலையில் திமுக அரசு உள்ளது. நான்கில் ஒரு பங்கு வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை. நாமக்கல்லில் கிட்னி திருட்டு முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளின் உடந்தையுடன் மணல் கொள்ளை சர்வ சாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்து நாளொன்றுக்கு ரூ.15 கோடி கொள்ளை நடக்கிறது. டாஸ்மாக் கடைகளில் ரூ.10 கூடுதலாக வசூலிப்பதால் ரூ.24,000 கோடி அளவுக்கு கொள்ளை அடிக்கப்படுகிறது. நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல் துறை ஊழல் குறித்து ED கடிதம் அனுப்பியும் நடவடிக்கை இல்லை” என்றார்.