ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை- ஈபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பொதுக்குழுவில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டு, ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அதனால் அதிமுகவில் அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. நடிகர் என்றால் கூட்டம் வரத்தான் செய்யும், விஜய் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சிறந்த அரசியல்வாதி நாங்கள்தான். 41 உயிர்கள் பறிபோய் இருக்கிறது. அவரைப் பார்க்க வந்ததால்தான் இறந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல்கூட தெரிவிக்க முடியவில்லை, கட்சி நடத்தி என்ன செய்வது? எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததாக விஜய் சொல்கிறார்? யாருக்காக அதனை விட்டுவிட்டு வந்தார்? கரூர் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத விஜய் ஒரு தலைவரா?
கல்விக்கடன் ரத்து என்ற வாக்குறுதி என்னவானது? அரசு ஊழியர்களுக்கு தந்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஸ்டாலின் அவர்களே... உங்கள் அப்பா முதலமைச்சராக, திமுக தலைவராக இருந்தார். அதனால் நீங்கள் பதவிக்கு வந்துவிட்டீர்கள். சாதாரண விவசாயி வர முடியுமா? எவ்வளவு கடினம் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான். உங்களுக்கு அந்த அனுபவம் கிடையாது. அதனால்தான் இந்த ஆட்சி தலைதொங்கிப்போய் கிடக்கிறது.