×

“39 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எத்தனை மருத்துவர்கள் பயன்படுத்தப்பட்டனர்? இதனால் தான் சந்தேகம்”- ஈபிஎஸ்

 

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “கரூர் ரவுண்டானா அருகே திமுக நடத்தும்போது, அதிமுகவுக்கும் தவெகவுக்கும் அனுமதி மறுத்தது ஏன்? கரூர் சம்பவத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் அசம்பாவிதத்தை தடுத்திருக்கலாம். 39 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எத்தனை மருத்துவர்கள் பயன்படுத்தப்பட்டனர்? கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு என்ன காரணம்? யார் காரணம் என்பதற்கு உரிய விளக்கம் இல்லை. தவெக தலைவர் 4 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி உள்ளார். ஏற்கெனவே நான்கு கூட்டங்களுக்கு எவ்வளவு மக்கள் பங்கேற்றார்கள் என உளவுத்துறை, காவல்துறை, அரசுக்கு தெரியும். அதற்கு ஏற்றவாறு இடத்தை ஒதுக்கி இருக்க வேண்டும். 

கரூரில் உடற்கூராய்வு மேஜை எங்கு உள்ளது.. 22 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டாலும், 3 மேஜைகளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு நடைபெற்றது எப்படி? தவெக கூட்டத்தை டிவியில் பார்த்தேன். 500 போலீசாரெல்லாம் அங்கே தெரியவில்லை. விஜய் பிரச்சாரத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக மக்கள் நினைக்கின்றனர். கரூர் ரவுண்டானாவில் துணை முதல்வர், எம்.பி.கனிமொழி பேசியுள்ளனர். அங்கு விஜய்க்கு அனுமதி தராதது ஏன்? கரூரில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக ஏடிஜிபி கூறினார். 660 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். இதிலேயே முரண்பாடு. இதனால்தான் கரூர் சம்பவத்தில் அரசின்மீது சந்தேகம் எழுகிறது” என்றார்.