☰
×

“விஜய்க்கு நன்றி இருக்கிறதா? எம்.எல்.ஏவை திருடியவர்களை என்னவென்று சொல்வது?”- எடப்பாடி பழனிசாமி

 

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது, நேற்று மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தாராபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தாராபுரத்தில் அதிமுகவில் போட்டியிட்டு மக்களால் வென்றவர், ராஜினாமா செய்துவிட்டு தவெக சென்றுவிட்டார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக போராடும் ஒரே கட்சி அதிமுக. அதிமுகவிலிருந்து சென்றவர் அழுது நடிக்கிறார். நடிப்பில் விஜய் தோற்றுவிட்டார். வேறு கட்சியில் வென்றவரை வெட்கமில்லாமல் ராஜினாமா செய்ய வைத்து, விஜய் பரப்புரை செய்கிறார். தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது, நேற்று மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளது. கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்தாரா? முதல்வர் விஜய்க்கு நன்றி உணர்வு உண்டா? நான் அளித்த வாய்ப்பால் தான் சத்தியபாமா தாராபுரம் தொகுதியில் வென்றார். எம்எல்ஏக்களை திருடியவா்களை என்னவென்று சொல்வது? 

எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற பிறகு அதிமுக மோசம் என்பதா? ஆளுங்கட்சிக்கு சென்றால்தான் மூட்டை முட்டையாக வாங்க முடியுமென கட்சி மாறிவிட்டார்கள். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என பார்க்காமல் மக்களுக்கான பிரச்சனைகளை மட்டுமே பார்க்க வேண்டும். மக்களுக்காக போராடிய கட்சி அதிமுக. கொரோனா காலத்தில் திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியிட அனுமதி வாங்க காத்திருந்தார். படத்திற்காக எனது வீட்டில் 3 மணி நேரமாக காத்திருந்த முதல்வருக்கு நன்றி உணர்வு இருக்கிறதா? தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும். ஆட்சியை பாதுகாக்க வேண்டும், தக்க வைக்க வேண்டுமென்பதால் கட்சியில் சேர்த்தது நியாயமா? எம்.எல்.ஏவை திருடியவர்களை என்னவென்று சொல்வது? அதற்கு பெயர் என்ன என மக்களே சொல்லட்டும், திருடுபோன அதிமுக எம்.எல்.ஏ பதவியை மீட்டுக் கொடுப்பீர்களா?” என்றார்.