அதிமுகவைபோல் பாமகவை பிளவுபடுத்த முயற்சி - எடப்பாடி பழனிசாமி
அதிமுகவைபோல் பாமகவை பிளவுபடுத்த விஷமிகள் முயன்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேலத்தில் பிரச்சாரத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , “திமுக ஆட்சியில் தமிழகத்து விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. சேலம் மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை திமுக திஅரசு வேண்டுமென்றே நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கூட திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. விவசாயிகள் என்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எளக்காரமாக உள்ளது. விவசாயிகள் தி.மு.க.வுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். மானத்தை காக்கும் நெசவாளர்களுக்கு இந்த திமுக ஆட்சியில் என்ன நன்மை கிடைத்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் பல்வேறு நலதிட்டங்களை கொண்டுவந்தோம்.
அதிமுகவைபோல் பாமகவை பிளவுபடுத்த விஷமிகள் முயன்றனர். திமுகவின் சூழ்ச்சிகளை அன்புமணி முறியடித்துவிட்டார். திமுகவால் அதிமுக, பாமகவை வீழ்த்த முடியாது. தமிழகத்தில் 234 தொகுதிகள் இருந்தாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே தொகுதி எடப்பாடி. திமுக ஆட்சியில் போதை ஆசாமிகளால் தென் மாவட்டங்களில் பல இடங்களில் அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளது. இதற்கு பிறகு மீண்டும் ஏன் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்?. எடப்பாடி சட்டமன்றத் தொகுதி அதிமுகவின் கோட்டை. 234 தொகுதிகள் இருந்தாலும் நன்கு அடையாளம் காணப்பட்ட தொகுதி எடப்பாடி. பழனிசாமி என்ற பெயரை மறந்து எடப்பாடியார் என்றே அன்போடு அழைக்கின்றனர்” எனக் கூறினார்.