“கொரோனா சமயத்தில் ஸ்டாலின் காணாமல் போனார் என்று தான் சொன்னேன், போய் சேர்ந்திருப்பார் என சொல்லவில்லை”- இபிஎஸ்
கொரோனா காலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களோடு இல்லாமல் காணாமல் போனார் என்றுதால் பேசினேன், முதலமைச்சரை தவறாக பேசவில்லை என எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டாக்டர் நடேசன் சாலை, இருசப்ப தெருவில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, நீட் கொண்டு வந்தது 2010 டிசம்பர் 21ம் தேதி. காங்கிரஸ் ஆட்சியில் இணை அமைச்சர் காந்தி செல்வன் இருந்த போது கொண்டுவரப்பட்டது. கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக. அதை எதிர்ப்பதும் அதே காங்கிரஸ், திமுக. எப்படி ஏமாற்றுகிறார்கள்..? இன்று வரை நீட்டுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. திமுக ஆட்சியில் 18 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவானது, அதில் 6999 சிறுமிகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் என்று சமூக நலத்துறை அமைச்சரே சொல்கிறார். போக்சோ என்றால் சிறுமிகள் பாலியல் வழக்கு, இந்த ஆட்சி நல்லாட்சியா? சிறுமிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா..? இப்படி ஆட்சியை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்கிறார். கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஸ்டாலின் சரியான ஆலோசனை கொடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.
கொளத்தூரில் பேசும் போது கொரோனா காலத்தில் எங்கே காணாமல் போனீர்கள் என்று கேட்டேன். .காணாமல் போனார் என்றுதான் பேசினேனே தவிற முதலமைச்சரை தவறாகப் பேசவில்லை. அப்படி பேசவேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்களும் உதயநிதியும் எப்படி கேவலமாகப் பேசினீர்கள், காலுக்குள் இருக்கிறேன் என்று சொன்னீர்கள், இதை ஏற்றுக்கொள்ள முடியுமா..? நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் 10 வார்த்தை திருப்பி பேச முடியும். நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நானல்ல, எதிரிகள் தான். 51 ஆண்டுகாலம் நான் யாரையும் கொச்சைப்படுத்தி பேசவில்லை. என்னை அவதூறாகப் பேசினால் வேடிக்கை பார்க்க மாட்டேன், தகுந்த பதிலடி உடனுக்குடன் கொடுப்பேன். கொரோனா காலத்தில் 32 மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அதிகாரிகளை அழைத்து, வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்களை அழைத்து கருத்துகளைக் கேட்டேன், உயிரைபற்றி கவலைப்படவில்லை, மக்களை பற்றி கவலைப்பட்டேன். முன்னெச்சரிக்க நடவடிக்கை எடுப்பதற்கு சந்தித்து வந்தேன். தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.