×


"நாங்க 4 நாட்களில் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டோம்... ஆனா திமுகவுல 25 நாட்களாக இழுபறி"- இபிஎஸ்

 

கருணாநிதி உயிருடன் இருந்தபோது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாத கட்சி திமுக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சென்னை ஆலந்தூரில் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நான் வரும்போது என் வாகனம் தண்ணீரில் நீந்துவது போல் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தது. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற மக்களின் எழுச்சியே சாட்சி. நாங்கள் நான்கு நாட்களில் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டோம். ஆனால் திமுக கூட்டணி 25 நாட்கள்  பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் இன்னும் இழிபறிதான். 10 ஆண்டு காலம் திமுகவின் இருந்த கட்சிகளுக்கு ஒரு தொகுதி குறைத்து கொடுத்திருக்கிறார்கள். புதிதாக சேர்ந்த ஒரு கட்சிக்கு அதிக தொகுதிகள் கொடுத்தார்கள். கருணாநிதி உயிருடன் இருந்தபோது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாத கட்சி திமுக. எங்கள் தலைவர்கள் யாரும் இல்லை என்ற போதிலும் 75 இடங்களில் வெற்றி பெற்றோம்.

திமுக கூட்டணி மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது. அதிமுக கூட்டணிக்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவை பார்த்து ஸ்டாலின் அதிர்ந்து போயுள்ளார்.திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது, அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதிமுகவில் இருந்து கொண்டு குழி பறித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டனர். அரசுக்கு ஒரு ரூபாய் வருமானம் இல்லாதபோதும் கூட சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். கொரோனா காலத்தில் வீடுகளில் மக்கள் முடங்கி கிடந்தபோதிலும் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். ஆனால் இப்போது கடன் வாங்குவதில் முதலிடம் தமிழ்நாடு என்ற நிலை உள்ளது. ” என்றார்.