×

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக பெற்று 4 ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி கொள்ளை- ஈபிஎஸ்

 

தருமபுரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தருமபுரி அரூர் தொகுதியில் அதிமுகவுக்கு கூடிய கூட்டத்தை முதலமைச்சர் திரும்பி பார்க்க வேண்டும். அடுத்தாண்டு அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்பதற்கான சாட்சி இந்த கூட்டம். 2021 தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின் 10% கூட நிறைவேற்றவில்லை. பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்று 4 ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி கொள்ள அடித்தனர்.

திறனற்ற திமுக ஆட்சியில் தி.மலையில் 2 காவலர்கள், தாயின் கண் முன்னே மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மன்னிக்க முடியாதது. அதிமுக ஆட்சி அமைந்த பின் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது திமுகதான். கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை. ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என நான்கு அதிகார மையங்கள், தமிழ்நாட்டில் அடுத்து முதலமைச்சர் யார் என அதிகாரப் போட்டி நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் மக்களிடம் நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின். கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் இறந்தபோது கள்ளக்குறிச்சி போகாத ஸ்டாலின், இரவோடு இரவாக கரூர் செல்வதன் நோக்கம் தேர்தல் மட்டுமே. ஆட்சியாளர்கள் கட்சி பேதமின்றி மக்களை பாதுகாக்க வேண்டும். மக்களை நாள்தோறும் வாட்டி வதைக்கும் உங்கள் Failure Model திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே, எங்கள்  கூட்டணியின் கொள்கைக்கான அடிப்படை. நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, நிதி, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், விலைவாசி உயர்வு ஆகிய அனைத்துத் துறைகளிலும் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது.

உங்களைப் போல் அல்லாமல் கூட்டத்திற்கு கூட்டம், மேடைக்கு மேடை, தெருவுக்கு தெரு நான் மக்களோடுதான் இருக்கிறேன் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள். அதற்கு நன்றி! உங்கள் ஆட்சியின் தவறுகளைச் சொன்னால், பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினால், அதிலும் நீங்கள் அரசியல் செய்யும் அவலத்தை தோலுரித்தால், அது உங்கள் கண்ணுக்கு கூட்டணிக் கணக்காக தெரிகிறது என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்வது?" எனக் கேள்வி எழுப்பினார்.