அதிமுக - பாஜக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்: ஈபிஎஸ்
திமுகவில் உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டனர், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததை முதலமைச்சரால் தாங்கி கொள்ள முடியவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் உரையாற்றிய அக்கட்சி பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி, "எந்தக் கட்சியாலும், ஏன் திமுகவால் கூட குறை சொல்ல முடியாத ஆட்சியை நாம் நடத்தினோம். பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது என்றுதான் குறை சொல்வார்கள். ஆனால், ஆட்சியில் எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு பொற்கால ஆட்சியை வழங்கியது அதிமுக. பாஜகவோடு அதிமுக கூட்டணி என்று தான் விமர்சிக்க முடியும். ஆட்சியில் குறைகூற முடியாதபடி இருந்தோம். அதேபோன்றதொரு ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டு வருவோம். 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம், தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது. 2024இல் அதிமுக - பாஜக கூட்டணி வாக்குகள் 41.33%. தமிழ்நாட்டு மக்கள் மக்களவைத் தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டப்பேரவை தேர்தலுக்கு வேறு மாதிரியும் வாக்களிப்பார்கள். 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். திமுகவில் உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டனர், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததை முதலமைச்சரால் தாங்கி கொள்ள முடியவில்லை.
மின் கட்டணத்தைக் கேட்டால் ஷாக் அடிக்கிறது என்று கூறிய ஸ்டாலின், அதனை ஆண்டுக்கு 5% உயர்த்தினார். இப்போது, கரண்டு பில்லைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது. மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க தொடர்ந்து வலியுறுத்தினோம். இளைஞர்கள் ஆதரவை இழந்ததால், தேர்தலை மனதில் வைத்து இப்போது தான் அதற்கு ஒப்புதல் கொடுக்கிறார். அன்று ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக் கொண்டுதான் வெளியே சென்றார், அதிமுக வெற்றி பெற்றதும் அவர் எந்த நிலையில் இருப்பார் என்று தெரியவில்லை. அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது" என்றார்.