“தப்பித் தவறி திமுகவினரின் மருத்துவமனைக்கு சென்றுவிடாதீர்கள்! கிட்னி திருட்டு கன்ஃபார்ம்”- ஈபிஎஸ்
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர்களுக்கு அதிமுக தொண்டர்களும், கூட்டணிக் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் சுற்றுப்பயணத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “துரைமுருகன் இருக்க வேண்டிய இடம் அதிமுக. ஐ.பெரியசாமி, டி.ஆர் பாலு, கே.என் நேரு என இன்றைய அமைச்சர்களின் மகன்கள் எல்லாம் பொறுப்பில் உள்ளனர். அதிமுகவில் மட்டும் தான் சாமானியர் யார் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ, எம்.பி., துணை முதல்வர் ஆகலாம். திமுகவில் இன்றைக்கு மூத்த எம்.எல்.ஏ துரைமுருகன் தான். மிசாவில் சிறை சென்றவர். அவருக்கு துணை முதல்வர் பதவி தரவில்லை. உழைப்பவர்களுக்கு அங்கு இடமில்லை. கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்பதால் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியுள்ளனர். அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களை கொண்டுவந்தோம். அதிமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி, திமுக ஆட்சி குடும்பத்திற்கான ஆட்சி. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என வாரிசு அரசியல் நடக்கிறது. குடும்ப ஆட்சி தொடர வேண்டுமா? காவல்துறையினருக்கே இன்றைக்கு பாதுகாப்பு இல்லை. திருப்பூரில் தோட்டம் ஒன்றில், அண்ணன் - தம்பி பிரச்சனை தொடர்பாக விசாரிக்க சென்ற SI கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தாண்டு இப்போது வரை 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீர்குழைந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு ஆத்தூரில் பட்டப்பகலில் நகைக்கடையில் ஆசிட் வீசி, கொள்ளையடித்துள்ளனர். இன்று ஒரு எம்.எல்.ஏ பேசுகிறார். ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கணும்னா, ஊர் மக்கள் கிட்னியை தான் கழட்ட வேண்டும்னு சொல்றார். இப்படிப்பட்ட கட்சி நமக்கு தேவையா? என் அப்பாவின் கார் 12 கோடி, கிட்னி திருடினா தான் அந்த பணம் கிடைக்கும் என்கிறார். இன்றைக்கு உடல் உறுப்புகளை திருடத் தொடங்கிவிட்டனர். தப்பித் தவறி திமுகவினர் நடத்தும் மருத்துவமனைக்கு சென்றுவிடாதீர்கள். திமுக எம்.எல்.ஏ நடத்தும் மருத்துவமனையே கிட்னி திருட்டில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. நடவடிக்கை எடுத்துள்ளார்களா? சென்னை மாநகராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் இன்று போராடி வருகின்றனர். அதிமுக ஆட்சியின் போது போராடியவர்களுடன் அமர்ந்து டீ குடித்து, திமுக ஆட்சி அமைந்தது கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்றார் ஸ்டாலின். இன்று அவர்களை கைது செய்கின்றனர். நெல்லையில் மேயர் அதிருப்தியில் திமுக கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் கக்கூஸ் குழுவுவதில் கூட ஊழல் செய்கிறார்கள். மதுரை மாநகராட்சியில் திமுகவினர் 150 கோடி ஊழல் செய்துள்ளதை சுட்டிக்காட்டி அதிமுக உட்பட பல கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து, முறைகேடுகள் நடந்தை திமுக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மாநகராட்சி மேயரின் கணவர் கைதாகியுள்ளார். இது ஊழல் அரசு” என்றார்.