"கைவிரித்த ஸ்டாலின்... திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்”- ஈபிஎஸ்
நீட் தேர்வை ரத்து செய்வதாக போலி வாக்குறுதி சொல்லி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், இப்போது நீட் தேர்வை எங்களால் ரத்து செய்ய முடியாது என்று கையை விரித்துவிட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, “நீட் தேர்வை ரத்து செய்வதாக போலி வாக்குறுதி சொல்லி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், இப்போது நீட் தேர்வை எங்களால் ரத்து செய்ய முடியாது என்று கையை விரித்துவிட்டார். அதிமுக ஆட்சியில் ரூ.3.05 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட்டது. திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது? எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது? திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மாபெரும் தலைவர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவது தான் திமுகவின் உண்மை முகம். கர்மவீரர் காமராஜரை பற்றி இழிவான கருத்தை தெரிவித்த திமுக எம்பி சிவாவை ஸ்டாலின் கண்டிக்க கூட இல்லை. திமுகவிற்கு பண்பு இல்லை...அடுத்த ஆண்டு திமுக காற்றில் கரைவது போல் கரையும்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 416 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைத்து மக்களுக்கு உதவியாக இருந்த அரசு அதிமுக அரசு. தமிழ்நாடு முழுவதும் 254 சுகாதார நிலையங்கள் கொண்டு வந்து மக்களுக்கு முறையான சிகிச்சை அளித்த அரசு அதிமுக அரசு. ஒரு நாள் தமிழ் நாட்டை திமுக அடமானம் வைக்கும். திமுக ஆட்சியில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. பெயர் வைப்பதில் பிரபலமான முதலமைச்சர் ஸ்டாலின். ஒரு திட்டத்தை அறிவித்தால் உடனே பெயர் வைத்து விடுவார். பெயர் வைப்பதில் நோபல் பரிசே கொடுக்கலாம்.” என்றார்.