"போலி வாக்காளர்களால் திமுக வெற்றி"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஆட்சி அதிகாரம் பெற்றுள்ள திமுக தான் போலி வாக்காளர்களை சேர்க்க துடிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கூறுகையில், “சட்டசபை ஒவ்வொரு தடவை கூடும்போதும் போதைப் பொருள் பழக்கம் கிராமம் முதல் நகரம் வரை பரவி விட்டதை நான் சுட்டி காட்டி வருகிறேன். ஆனால் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. அதிமுக, பாஜக கூட்டணியை பார்த்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. சென்னை மாநகராட்சியில் போலி வாக்காளர்களால்தான் திமுக வெற்றி பெறுகிறது. மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார். ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆட்சியில் இருக்கும் திமுகதான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக உள்ளது. சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் 27,779 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. போலி வாக்காளர்கள் விவகாரத்தில் அதிமுகவை விமர்சனம் செய்ய திமுகவிற்கு தகுதி கிடையாது.
திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து இன்று வரை மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடுகின்றனர். ஏராளமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி கொல்லைப்புறத்தின் வழியே ஆட்சிக்கு வந்து, மக்களை மறந்த அரசாங்கம் திமுக. அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றதை பல முறை நிரூபித்து இருக்கிறது. திமுக தனித்து போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேளுங்கள். செய்ய முடியாத திட்டங்களை சொல்லி திமுக ஆட்சிக்கு வந்தது. நாங்கள் நிறைவேற்ற முடியாததை பொய்யான வாக்குறுதிகளாக சொல்ல மாட்டோம். இருக்கிற நிதியை வைத்துக் கொண்டு மக்களுக்கு தேவையானதை செய்து கொடுப்போம்” என்றார்.