" நீங்க பாஜக உடன் கூட்டணி வெச்சா அது நல்ல கட்சி, நாங்க கூட்டணி வெச்சா அது மதவாத கட்சியா?"- ஈபிஎஸ்
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தின் மூலம் தொடர்ச்சியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வந்த நிலையில் பிரதமர் மோடி நேற்றைய முன்தினம் தமிழ்நாடு வந்ததால் அவரை சந்திப்பதற்காக மூன்று தினங்கள் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திவிட்டு இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஐந்து விளக்கு பகுதியில் மீண்டும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தை தொடங்கினார். காரைக்குடி வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்து உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “2001ல பாஜக உடன் கூட்டணி வைத்தீங்க தான? அன்றைக்கு அண்ணன் ராஜா கூட போட்டியிட்டார். அவரே அதுக்கு சாட்சி. நீங்க பாஜக உடன் கூட்டணி வெச்சா அது நல்ல கட்சி, நாங்க கூட்டணி வெச்சா அது மதவாத கட்சியா? மக்களை இனி திமுகவால் ஏமாற்ற முடியாது. திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி தலைவர்கள் ஏதேதோ பேசி வருகின்றனர். அங்கு மிகப் பெரிய விரிசல் ஏற்படுகின்ற சூழல் நிலவி வருகிறது. இன்னும் தேர்தலுக்கு எட்டு மாத காலம் இருக்கிறது. அதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அங்கேயே இருக்குமோ இருக்காதோ என்று தெரியாத நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இருக்கக்கூடிய சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அந்தந்த கட்சிகள் கூட்டணி வைப்பார்கள். அப்புறம் ஏன் தவறான கருத்தை அவதூறான கருத்தை பரப்பி அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சிக்கிறது, அது ஒரு காலமும் நடக்காது. அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. என்றைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சிகள். ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் கஷ்டம், நஷ்டம், துன்பம் உள்ளிட்டவற்றை முழுமையாக தெரிந்து மத்தியிலும் மாநிலத்திலும் சரியான ஆட்சி கொடுத்த கட்சிகள் பாஜக மற்றும் அதிமுக.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாம் சந்தித்தால் நாம் சென்று கதவை தட்டுகிறோம் என்று கூறுகிறார்கள், பிரதமர் மோடி நேற்று முன்தினம் வந்தார், எத்தனை பேர் சென்று கதவை தட்டினார்கள். அப்படியே வரிசையில் நின்று கதவை தட்டினார்கள், அப்படி தட்டவில்லை என்றால் கதை முடிந்துவிடும். அப்படி அச்சத்தோடு சென்று இத்தனை பேர் போய் எதற்கு கதவை தட்டினீர்கள்? நாங்கள் முறையாக சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாடு பிரச்சனைகளை சொல்கிறோம், அவர்கள் சில பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். நீங்கள்தான் அங்கு போகவே மாட்டீர்களே....பாஜக என்றால் கசக்கிறது, ஏதாவது பிரச்சனை என்று வந்தால் ஓடி சென்று கதவை தட்டுகிறீர்கள்! இது நியாயமா?” எனக் கேள்வி எழுப்பினர்.