×

அதிமுக ஆட்சிக்கு வந்தால் இலவச வீட்டு மனையுடன் அரசே வீடு கட்டி கொடுக்கும்- எடப்பாடி பழனிசாமி

 

கந்தர்வகோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “கந்தர்வகோட்டை தொகுதி விவசாயிகள் நிறைந்த தொகுதி. அதிமுக ஆட்சியில் இந்த பகுதி பசுமையாக மாற்றுவதற்கு, நானே நேரடியாக வந்து, ரூ.200 கோடியில் காவிரி - குண்டாறு திட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்று அதை முடக்கி வைத்துள்ளார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் காவிரி - குண்டாறு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். இங்கு நிலையான குடிநீர் வழங்க, கூட்டுக்குடிநீர் திட்டத்தை 574 கோடியில் 2 கட்டமாக தொடங்கி வைத்தேன். இன்று குடிநீரில் கூட அரசியல் செய்கிறது திமுக அரசு.

இந்த பகுதி விவசாய, ஏழைக் குடும்ப மாணவர்கள் கல்வி கற்க அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்துக் கொடுத்தோம். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அமைத்துக் கொடுத்துள்ளோம். மாணவர்களுக்கு எது தேவை என்பதை அறிந்து செயல்பட்டது அதிமுக அரசு. மீண்டும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம். எடப்பாடி பழனிசாமி போற பக்கம் எல்லாம் ஏதேதோ பேசுகிறார் என்கின்றனர் திமுகவினர். கந்தர்வகோட்டை பக்கம் வந்து மக்களை வெள்ளத்தை பாருங்க. இதை பார்த்துமா ஆட்சிக்கு வருவீர்கள் என்று நீங்க நினைக்குறீங்க? கொரோனா காலத்தில் விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம். அந்த நேரத்தில் கல்லூரி, பள்ளிகளுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு, ஆல் பாஸ் போட்டுக் கொடுத்தோம். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் 2 முறை தள்ளுபடி, மும்முனை மின்சாரம் தந்தோம். மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும், ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அழகான கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். வீட்டு மனை இல்லாதவர்களுக்கு, வீட்டு மனையை அரசே வழங்கி, விலையில்லா வீடு கட்டித் தரப்படும். தைப்பொங்கல் அன்று ரூ.2500 தருவோம். 2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும், பொங்கல் போல, தீபாவளியை முன்னிட்டும் நம் மாநிலத்து பெண்களுக்கு அழகான பட்டுப் புடவைகள் வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாக சொன்னார்கள், ஆனால் ஏமாற்றிவிட்டார்கள்” என பேசினார்.