"மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்"- எடப்பாடி பழனிசாமி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மன்னார்குடியில் சுற்றுப்பயணத்தின்போது உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இன்றைக்கு மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. அரசு அதிகாரிகள் துணை இல்லாமல், மணல் கொள்ளைகள் நடக்காது. கரூரில் மணல் மாஃபியாக்கள் திருட்டுத்தனமாக மணல் அள்ளியதை தட்டிக் கேட்டவரை, வெட்டி கொலை செய்கிறார்கள். இதுவரை அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று போதைப்பொருள் விற்பனை அதிகமாகிவிட்டது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையால், சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. திருவள்ளூரில் 10 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க இயலவில்லை?
மக்களை சந்திப்பது தவறா? நான் மக்களை சந்திக்கிறேன். திருமாவளவன் அவர்கள் ஒரே நாளில் படித்து, அன்றே தேர்வு எழுதுபவராம். மக்களை சந்திப்பது தவறு என்று சொல்லக்கூடிய கட்சியாகிவிட்டது விசிக. தொகுதிக்கு போனால் தானே மக்கள் பிரச்சனை தெரியும்? திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வந்தது. அவர் பூரண நலம் பெற்று, திரும்பி வர என் சார்பாகவும், உங்கள் சார்பாகவும் வேண்டுகிறேன்” என்றார்.