“மு.க.ஸ்டாலின் ஒரேயொரு சாதனை படைத்துள்ளார்”- எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து என்ற ஸ்டாலின் பொய்யான வாக்குறுதியால் 24 உயிர்கள் பறிபோனதற்கு ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை அரியலூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அரியலூர் கடைவீதியில் நடந்து சென்று பொது மக்களை சந்தித்த பின்னர், அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்து நின்று கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே எடப்பாடி பழனிச்சாமி பேசினர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் இரண்டு கண் போன்றவர்கள். உழைக்கும் விவசாயிகளின் எண்ணங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியில் அரியலூர் உள்ளிட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்து சாதனை படைத்தோம். 7 சட்ட கல்லூரி, 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரி என ஏராளமான கல்லூரிகளை அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு படிப்பு என்றால் கசக்கும் என ஸ்டாலின் பேசியுள்ளார். படிப்பு என்றால் உயிருக்கு மேலாக மதிக்க கூடியவன் நான். திமுக ஆட்சியில் எத்தனை கல்லூரிகள் தொடங்கப்பட்டது ? ஒரு மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை. அதற்கு திறமை வேண்டும். ஸ்டாலினுக்கு எந்த திறமையும் இல்லை. அவர் பொம்மை முதலமைச்சர். மேலும், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு அதிமுக ஆட்சி தான் காரணம்.
பா.ஜ.க அதிமுகவை விழுங்கி விடும் என ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டாலின் எத்தனையோ அவதாரங்கள் எடுத்து பார்த்தார். ஆனால் அதிமுகவை ஸ்டாலினால் உடைக்க முடியவில்லை, சில எட்டப்பர்கள் திமுக உடன் சேர்ந்து அதிமுகவை உடைக்க பார்த்தார்கள் அதுவும் முடியவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அதில் அதிமுக தனிபெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைக்கும். நீட் தேர்வில் அனிதா மரணமடைந்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வில் கவனம் செலுத்தவில்லை என்றார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதியை அளித்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. இதனால் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக 24 பேர் உயிரிழந்தனர். அதற்கு ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். வாக்குறுதி கொடுத்து மாணவர்களை ஏமாற்றி விட்டார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திய கட்சி அதிமுக. அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். அதனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்வி கிடைத்துள்ளது. 4 ஆண்டுகள் கழித்து தற்போது தான் மக்களை பற்றி சிந்தித்து உங்களுடன் ஸ்டாலின் என்கிற திட்டத்தை கொண்டு வந்தார். அப்படியென்றால் இதுவரை யாருடன் இருந்தார்? நாட்டு மக்களை ஏமாற்றுவதில் முதலிடத்தில் உள்ளவர் ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினை எம்.எல்.ஏ, அமைச்சராக்கி தற்போது அவரை துணை முதல்வராக்கியது தான் ஸ்டாலினின் நான்காண்டு ஆட்சியின் சாதனை” என பேசினார்.