×

"உங்களுடன் ஸ்டாலின்" அதிமுகவினுடைய திட்டம்! கைகழுவி விட்ட திமுக- ஈபிஎஸ்

 

குன்னம் சட்டமன்றத் தொகுதியில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற முழக்கத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் பிரச்சாரத்திற்கு அதிமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதீத வரவேற்பு அளித்து வருகின்றனர்.

குன்னம் தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரச்சார பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “குன்னம் தொகுதியில் கூடிய மக்கள் கூட்டம் ஒரே குரலில் Bye Bye Stalin என சொல்கிறார்கள், 2026ல் அமையபோது மன்னராட்சி அல்ல, மக்களின் ஆட்சி, அதிமுகவின் ஆட்சி. 200 இடங்களில் வெற்றி என திமுக கனவு வேண்டுமென்றால் காணலாம், ஆனால் நிஜத்தில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். அதிமுக ஆட்சியில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவிப்பு கொடுத்து பணி துவங்கி நடந்து கொண்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கைகழுவி விட்டது. பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் சரி நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? ஸ்டாலின் அவர்களே பெண்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று விட்டீர்கள். இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை முதலமைச்சர் சொந்த பணமா? கண்ணால் பார்க்க முடியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக.

"உங்களுடன் ஸ்டாலின்" அதிமுகவினுடைய திட்டம். ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுடைய கஷ்டம் நஷ்டம் துன்பங்களை அறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என புரட்சி தலைவி அம்மா கொண்டு வந்த திட்டம். திமுக ஆட்சிக்கு வந்த 4 வருடங்களில் 7737 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அதே போல் கடந்த 6 மாதங்களில் 730 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது தான் திமுகவின் சாதனை. ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்தியை கவர்ச்சிகரமாக பேசி, வாக்குகளைப் பெற்று கொல்லைபுறத்தின் வழியாக ஆட்சியைப் பிடித்து விட்டார்கள்” என்றார்.