தமிழ்நாட்டில் வரும் தேர்தலோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்- எடப்பாடி பழனிசாமி
அதிமுக, பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேட்டுப்பாளையத்தில் தேர்தல் சுற்றுப்பயண தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் அவர்களே இந்த கூட்டத்தை பார்த்து உங்களுக்கு ஜுரம் வரப்போகிறது. நாளையே மருத்துவமனை செல்லக்கூடிய சூழல் ஏற்படலாம். 2026 தேர்தலில் தீயசக்தியான திமுகவின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும், நாட்டுக்கு பெருமை சேர்க்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். தமிழகத்தில் நல்ல ஆட்சியை கொண்டு வருவோம், அதிமுக, பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். பாஜக உடன் திமுக கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்தியில் இருந்து திட்டங்களை பெற்று நன்மை செய்வதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும். . இந்த தீயசக்தி திமுக ஆட்சியை வீழ்த்தி, நல்லாட்சியை நாம் கொண்டுவருவோம். நாட்டு மக்களை இனி ஏமாற்ற முடியாது.
1999 இல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா? மத்தியில் 10 ஆண்டு காங்கிரஸ் அரசில் இருந்தபோது திமுக எதையும் செய்யவில்லை. நீங்கள் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி? நாங்கள் கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா? ஆனால் நீங்கள் எமர்ஜென்சியை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கின்றீர்கள். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. இனியும் மக்கள் உங்களை நம்ப தயாராக இல்லை. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நிலையான ஆட்சி நடைபெற்றுவருகிறது. கொள்ளை அடிப்பதே திமுகவின் நோக்கம். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும், யாராலும் தடுக்க முடியாது. ” என்றார்.