தொண்டர்கள் எதிர்ப்பார்க்கும் கூட்டணி விரைவில் அமையும்- ஈபிஎஸ்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகளை கூட்டணியில் இடம்பெறச் செய்து, மெகா கூட்டணியை அமைப்பதற்கு வியூகம் வகுத்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி விரைவில் அமையும். பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணையும். 200 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் சூழல் உள்ளது. அதற்கான ஒத்துழைப்பை நீங்கள் வழங்க வேண்டும், உழைக்க வேண்டும். எப்படி அமைதியாக பாஜக கூட்டணி உறுதியானதோ, அதேபோல் மற்ற கட்சிகளும் கூட்டணிக்குள் வரும் கவலைப்படாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள். பாஜக கூட்டணி குறித்து பொதுவெளியில் எந்தவொரு விமர்சனத்தையும் வைக்க வேண்டாம். 234 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுவதாக நினைத்து நீங்கள் வேலை பார்க்க வேண்டும்” என்றார்.