தவெக ஆட்சி படு பாதாளத்திற்குச் செல்லும் - எடப்பாடி பழனிசாமி
மீனவர் விவகாரத்தை விட வேறு என்ன முக்கிய விஷயம் இருந்துவிடப் போகிறது? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சவுதியில் உள்ள கொல்லப்பட்ட மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் உடலை தமிழகம் கொண்டு வர வலியுறுத்தினோம். கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து 5 நாள்களாகியும் இதுவரை எடுக்கப்படவில்லை.தாங்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதிக்க மறுத்ததால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழர் எங்கு பாதிக்கப்பட்டாலும் அரசு தான் குரல் கொடுக்க வேண்டும். சீர்காழி மீனவரின் உடல் ஒரு வாரமாக சவுதியிலேயே உள்ளது. சீர்காழி மீனவர் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை இல்லை. தமிழர்களை காப்போம் என பேச மட்டுமே செய்கின்றனர். தமிழகத்தின் நிலைமையை நினைத்தால் வேதனையாக உள்ளது. தமிழருக்கு பாதிப்பு என்றால் உடனே கவன ஈர்ப்பு எடுக்க வேண்டும்.இதுவே அதிமுக, திமுக அரசாக இருந்தால் கவன ஈர்ப்பு எடுத்திருப்போம்.
தமிழர்களை காப்போம் என்கிறது தவெக அரசு. ஆனால் வெறும் பேச்சு மட்டும் தான்.எந்த வேகத்தில் ஆட்சி அமைந்ததோ, அதே வேகத்தில் படு பாதாளத்திற்கு சென்று விடும்.மீனவர் விவகாரத்தை விட வேறு என்ன முக்கிய விஷயம் இருந்துவிடப் போகிறது? ஆட்சியே நடக்கவில்லை. ரீல்ஸ் வெளியிட்டு ரீல் விடுவதே இந்த ஆட்சியில் நடக்கிறது. தவெக அரசுக்கு தமிழ் உணர்வு என்பதே இல்லை. எதற்குக் கத்துகிறார்கள் என்றே தவெக தொண்டர்களுக்குத் தெரியவில்லை” என்றார்.