“நாங்கள் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள்” - எடப்பாடி பழனிசாமி
நாங்கள் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். எடப்பாடி பழனிசாமி எனக்கும் தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. எப்போது இணைந்தோமோ அப்போதே போய்விட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “வைகோ திமுக குறித்தும், மு.க.ஸ்டாலின் குறித்தும் எந்த அளவிற்கு விமர்சனம் செய்திருக்கிறார். ஆனால், அவர் மீண்டும் திமுக உடன் கூட்டணி சேரவில்லையா? எமர்ஜென்சி, மிசா கொண்டு வந்த காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி அமைக்கவில்லையா? அறிவாலயத்தில் மேல் தளத்தில் ரெய்டு நடந்தது, கீழ்தளத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்படிப்பட்ட கட்சிகளெல்லாம் கூட்டணி வைக்கின்றபோது, எங்களுக்கு எந்தவித சங்கடமும் கிடையாது. எமர்ஜென்சி, மிசா, கொண்டு வந்த காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி அமைக்கவில்லையா?
எனக்கும் தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. எப்போது இணைந்தோமோ அப்போதே போய்விட்டது. எங்களுக்கு இடையே மனஸ்தாபங்கள் இருந்தது உண்மைதான். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஒன்றிணைந்துள்ளோம். எங்களுக்குள் இருந்தது குடும்ப பிரச்சனை மற்றும் கட்சி பிரச்சனை. அதனை மறந்து ஒன்றிணைந்துள்ளோம். எப்போதும்போல் அண்ணன், தம்பியாக செயல்பட்டு அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம். நானும் டிடிவி தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். அவர் விட்டு சென்ற பணிகளை தொடருவோம். எங்களது ஒரே நோக்கம் மக்கள் விரோத திமுகவை அகற்றி அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.