×

சளி, காய்ச்சலுக்கு நாய் கடிக்கான ஊசி போடுகிறார்கள்! இந்த ஆட்சி தேவையா?- எடப்பாடி பழனிசாமி

 

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக தைப் பொங்கல் காலத்தில் விலையில்லா வேட்டி, சேலைகளை கொடுத்தோம். இன்று அதை நிறுத்தியுள்ளனர். அதிமுக ஆட்சி வந்ததும் அதை மீண்டும் வழங்குவோம். தீபாவளி அன்று தாய்மார்களுக்கு சேலை வழங்குவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணத்தின்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , “கனிமொழி ஒரு கூட்டத்தில் பேசும்போது, அங்கு பாதுகாப்பில் இருந்த பெண் காவலர்களிடம் பாலியல் சீண்டலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பாட்டி முதல் சிறுமிகள் வரை பாதுகாப்பின்றி உள்ளனர். தமிழகத்திற்கு மத்தியில் இருப்பவர்கள் நிதி தருவதில்லை என்கிறார் ஸ்டாலின். 16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, அப்போது ஏன் நிதியை பெற்றுக் கொண்டுவந்து மக்களுக்கு எதுவும் செய்யவில்லை? குடும்பத்திற்கு எனில் எதையும் செய்வார்கள். அதிமுக ஆட்சியில் இந்த பகுதியில் தாமிரபரணி - வைப்பாறு திட்டத்தை கொண்டுவர அடிக்கல் நாட்டினோம். இப்போது அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். திட்டங்களை நிறைவேற்ற பணமில்லை என்கிறார்கள், கார் பந்தயம் நடத்த மட்டும் பணம் உள்ளதா? மக்களுக்கு திட்டங்களுக்கு செலவு செய்ய பணம் இல்லையாம், ஆனால் அவரின் தந்தைக்கு எழுதாத பேனாவுக்கு கடலுக்கு உள்ளே 2 கி.மீ தூரத்தில் சிலை வைக்கிறார்களாம். உங்க டிரஸ்ட் பணத்துல பேனா வைங்க, மணிமண்டபம் கட்டுங்க. மக்கள் பணத்தை ஏன் வீணாக்குறீங்க!


இந்தியாவிலேயே முன்மாதிரியான ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாம். ஆமாம், இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முன்மாதிரியாக உள்ள ஆட்சி இந்த திமுக ஆட்சி தான். இந்த கடனை எல்லாம் மக்களாகிய நாம் தான் திருப்பிச் செலுத்த வேண்டும். திமுக அரசு திவாலாகிவிட்டது. தினம் ஒரு பெயரை வைப்பார்கள். போட்டோசூட் மட்டுமே எடுக்கிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் என இப்போது வருகிறார்கள். இத்தனை நாட்கள் குடும்பத்தோடு இருந்தார். நலம் காக்க ஸ்டாலின் என்கிறார்கள். இதுவரை நலம் காக்க என்ன திட்டம் கொண்டு வந்தார்? சுய விளம்பரத்துக்காக தன் பெயரை அரசு திட்டங்களுக்கு வைத்தார் ஸ்டாலின். அதற்கு இன்றைக்கு உயர்நீதிமன்றம் தடையாணை கொடுத்துள்ளது. மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது. சளி காய்ச்சலுக்கு நாய் கடிக்கான ஊசி போடுகிறார்கள். இந்த ஆட்சி தேவையா?

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக தைப் பொங்கல் காலத்தில் விலையில்லா வேட்டி, சேலைகளை கொடுத்தோம். இன்று அதை நிறுத்தியுள்ளனர். அதிமுக ஆட்சி வந்ததும் அதை மீண்டும் வழங்குவோம். தீபாவளி அன்று தாய்மார்களுக்கு சேலை வழங்குவோம். தீப்பட்டி தொழிலுக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. தீப்பட்டி தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, அதை 12%-ஆக குறைத்துள்ளோம். லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். நிச்சயம் மத்திய அரசோடு பேசி, பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்வோம். இப்போது இங்கு கூடியுள்ள மக்கள் வெள்ளத்தை பார்த்தால், மீண்டும் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றாலும் செல்வார். அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியாம். இது எங்க கூட்டணி. ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்டதாம். இது பலம் வாய்ந்த கூட்டணி” என்றார்.