×

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் தாலிக்குத் தங்கத்துடன் கூடுதலாக பட்டுப்புடவை வழங்கப்படும்- ஈபிஎஸ்

 

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

பாபநாசம் பஜார் சாலையில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, “இந்த 50 மாத கால ஆட்சியில் விவசாய தொழிலாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த நன்மையாவது திமுக செய்துள்ளதா என்று பார்த்தால் எதுவுமே இல்லை. 2011 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் 21 அரசு மருத்துவக் கல்லூரி திறந்து வைத்து இந்திய அளவில் அதிமுக வரலாற்று சாதனை படைத்ததுள்ளது. காவல் துறை செயலிழந்துவிட்டது. தமிழ்நாட்டில் கள்ளச்சாரயம், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. எப்போதும் வீட்டு மக்களையே எண்ணி எண்ணி நாட்டு மக்களை மறந்தவர் ஸ்டாலின்.

குளறுபடியாக நடந்த TNPSC GROUP 4 தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்தப்பட வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நெசவாளர்களின் நலனுக்காக மீண்டும் தாலிக்குத் தங்கத்துடன் கூடுதலாக பட்டுப்புடவை வழங்கப்படும். 2026ல் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி மிகப்பெரிய கூட்டணியாக அமைந்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெறும். முக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்” என்றார்.