கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ-வை கண்டித்து நவ.17 ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியருக்கு, தவெக MLA குறுஞ்செய்தி அனுப்பிய சர்ச்சை தொடர்பாக நவ.17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகளைத் தடுத்து நிறுத்தும்பொருட்டு, பல சமயங்களில் கழகத்தின் சார்பாக எடுத்துரைக்கப்படும் எந்தவித கருத்துகளையும் உள்வாங்கிக்கொள்ளாமல் ரீல்ஸ் ஆட்சி வெற்று விளம்பரங்களிலேயே கவனம் செலுத்தி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, த.வெ.க-வைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், தான் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதற்கு த.வெ.க-வின் ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துணை போனதாகவும், நாடறிய பத்திரிகையாளர்கள் முன்னிலையில் குற்றம் சாட்டினார்.
தமிழ் நாட்டில் அனைத்து மக்களின் இதயத்தையும் உலுக்கிய அந்த நிகழ்வில், வழக்குகூட பதிவு செய்யாமல் தனது சொந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை திரு. ஜோசப் விஜய் காப்பாற்றினார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்த ஆட்சியில் எந்தவித நீதியும் கிடைக்காமல் கைவிடப்பட்டார். இப்படியான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்பொழுது, கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் த.வெ.க-வைச் சேர்ந்த அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், இரவு நேரத்தில் அத்துமீறி அவருடைய வீட்டிற்குள் நுழைந்ததாகவும் புகார்கள் வரப்பட்டு, தமிழ் நாடு முழுவதும் அது பேசும் பொருளாக மாறி இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினரின் இந்த அருவருக்கத்தக்க நடவடிக்கையை, மாவட்ட ஆட்சியரின் கணவர் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.ஆனால், ஆளும் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது திரு. ஜோசப் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவரைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது, உள்ளபடியே தமிழ் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த அருவருக்கத்தக்க சம்பவம் பொதுவெளியில் பேசப்பட்டு சில நாட்களைக் கடந்துவிட்டபோதும், பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற மாவட்ட ஆட்சியர், அந்தக் குற்றச்சாட்டை எங்கும் மறுக்கவில்லை. இதுவே, இந்தக் குற்றம் நடந்திருக்கிறது எற்பதற்கான பெரிய சாட்சியாக சொல்லப்பட வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் என்பவர் மிகப் பெரிய அதிகாரத்தோடு மக்கள் பணிகளை ஆற்றுபவர். அவருக்கே இந்த தற்குறி அரசாங்கத்தின் சட்டமன்ற உறுப்பினர் இவ்வளவு பெரிய கொடுமையை இழைக்க முடியும் என்றால், திரு. ஜோசப் விஜய்யின் மோசமான ஆட்சியில், சாதாராண பெண்களின் நிலைமையை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது.'ரோம் பற்றி எரிந்தபொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தான்' என்பதைப் போல, எவ்வளவு அருவருக்கத்தக்க வேலையை த.வெ.க. நிர்வாகிகள் செய்தாலும், எனக்கென்ன என்று தன்னுடைய சுகபோக வாழ்க்கையை மட்டுமே கருத்தில்கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற ரீல்ஸ் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்யின் ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு முழுமையாக கெட்டுப் போயிருப்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ரீல்ஸ் மாடல் ஆட்சியில் மேற்கண்ட சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரைப் காப்பாற்றி வரும் திரு. ஜோசப் விஜய்க்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகத்தைத் தனது கையில் வைத்திருக்கும் மாவட்ட ஆட்சியருக்கு, ஆளும் கட்சி என்ற மமதையில் கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரால் இழைக்கப்பட்ட அநீதியை, கண்டும் காணாமலும் இருந்து வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்; இவ்விஷயத்தில் பாரபட்சமின்றி உரிய விசாரணை செய்து, தவறிழைத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணியின் சார்பில், 17.11.2026 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில், கள்ளக்குறிச்சி நகராட்சி, அம்பேத்கர் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி பா. வளர்மதி அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. ப. மோகன், கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. இரா. குமரகுரு, Ex. M.L.A., முகையூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திருக்கோயிலூர் தொகுதி திரு. S. பழனிசாமி, M.L.A., சின்ன சேலம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் சங்கராபுரம் தொகுதி திரு. R. ராகேஷ், M.L.A., கழக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணிச் செயலாளருமான திருமதி A. அமுதா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்" என அறிவித்துள்ளார்.